இசைத்தமிழ் :
தமிழை இயல், இசை, கூத்து (நாடகம்) என மூன்றாகப் பகுத்து முத்தமிழ் எனக் காண்பது பண்டைய நெறி. இயற்றமிழ் (இயல் தமிழ்) இயல்பாகப் பேசும் தமிழ் எனவும், இசைத்தமிழ் என்பது பண்ணிசைத்துப் பாடும் தமிழ் எனவும், கூத்து ஆடிப் பாடும் தமிழ் எனவும் அழைக்கப்படுகிறது. சொல்லக்கருதிய கருத்துக்களைக் கேட்போர், விரும்பியேற்றுக் கொள்ளும் படி, இனிய ஓசையோடு கூடிய சொற்களாற் புலப்படுத்துவது இசைத்தமிழ் ஆகும். மூலாதாரம் தொடங்கிய எழுத்தோசை ஆளத்தியாய்ப் பின் இசையென்றும், பண்ணென்றும் அழைக்கப்படுகிறது. பல இயற்பாக்களோடு, இன்னோசையாகிய நிறத்தை இசைத்தலால், இசையென்று பெயராயிற்று என்பர். இயற்றமிழ்ப் பாவினோடு,[1] இசையினை இயைத்துப் பாடுதலென்பது, ஓவியர் நிறங் தீட்டுதல் போல்வதோர் செய்கையாகும். “நிறந் தோன்ற” எனச் சிலப்பதிகார வுரையாசிரியர் வழங்கி இருத்தலை நோக்குங்கால், நிறம் என்னும் தமிழ்ச் சொல் இராகம் என்ற பொருளில் வழங்கியதென்பது பெறப் படும். கடைச் சங்கத்தார் இயற்றிய பரிபாடல் நூலில் இப்போது கிடைத்திருக்கும் பாடல்களில் பலவற்றிற்குப் பாடினார் பெயரும், பண்ணின் பெயரும், இசை வகுத்தார் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகுத்தெழுதிய இசை முறையும், அம்முறைபற்றிய இசைக்குறிப்பும் இக்காலத்திற் கிடைக்கவில்லை.
வகை :
பா என்பதோடு, இயைத்துரைக்கப்பட்ட இசையினை, “நெஞ்சு, கண்டம், நா, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை” என்னும் எட்டிடங்களிலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண் வகைத் தொழில்களால் உருவாகப் பண்ணிச் சீர்ப்படுத்திப் பாடப்பெறுவது, பண்ணாதலின் பண்ணென்றக் காரணப் பெயர் வந்ததென்பர். மிடற்றுப் பாடல், குழல், யாழ் முதலிய இசைக் கருவிகளின் ஒலி, அவற்றின் கால அளவினைப் புலப்படுத்தும் தாளம் ஆகிய இவை மூன்றும் ஒத்திசைத்து இயங்குவதே இசையென்பர். இன்பத்திலும், துன்பத்திலும், பாட்டுத் தோன்றி உள்ளத்திற்கு ஆறுதலளிக்கின்றது. செய்யுளில் எழுத்துக்கள் பெறும் மாத்திரை யளவுரைக்கும் இலக்கணம் இயற்றமிழுக்கும் இசைத் தமிழுக்கும் பொதுவாகும். வெண்பா , ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுக்கும் உரிய செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்னும் ஓசை விகற்பங்கள், தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவை. தாளம் பிழையாது நிற்கப் பாவினது
Recent Comments